வெள்ளக்கோவில் அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு

வெள்ளக்கோவில் அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல்லை திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல்

வெள்ளக்கோவில் அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல்லை திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிகுமார் தலைமையிலான குழுவினர் வெள்ளக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செடி, கொடிகளுக்கு இடையில் மணல் மூடி கிடந்த நடுக்கல்லைக் கண்டுபிடித்தனர். அதனை சுத்தம் செய்து பார்த்தபோது அந்த நடுகல் சுமார் 500 ஆண்டுகள் பழமையான நடுகல் என்பது தெரியவந்தது.   
இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிகுமார் கூறியதாவது:
வீர மறவர்கள் தங்கள் வீரத்தால் விளைநிலங்களை மட்டுமல்ல, வேளாண்மையின் அச்சாணியாக விளங்கிய பயிர்களையும் கண்போல் பாதுகாத்து வந்துள்ளனர். இப்பயிர்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய வலிமைமிக்க காட்டுப் பன்றிகளைக் கொல்வது சிரமமான செயலாகும்.
இந்தக் காட்டுப் பன்றியுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் பண்டைய தமிழ் மக்கள் நடுகற்கள் எடுத்து அவற்றைப் போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
தற்போது, கிடைத்துள்ள வீர நடுகல் 145 செ.மீ. உயரமும்,  85 செ.மீ. அகலமும் உடையதாகும். இதில் வீரனின் தலை வலதுபுறம் திரும்பிய நிலையிலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட சிகை அலங்காரத்துடன், காதில் குண்டலமும் மேற் கையில் கடக வளையும், கை மணிக்கட்டில் வீரக் காப்பும், கழுத்தில் சரப்பளி அணிகலனும், மார்பில் வீரத்துக்கு அடையாளமாக சன்ன வீரமும் இடையில் குறுவாளை வைப்பதற்கான உறையுடன் கூடிய வேலைப்பாடுடன் நிறைந்த ஆடையும் அணிந்து மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
மாவீரன் தனது இடது கையில் கயிற்றுடன் கூடிய ஒரு கூர்மையான ஆயுதத்தின் மூலம் காட்டுப் பன்றியின் வாய்ப் பகுதியைக் குத்தி அப்பன்றி தன் வாயைத் திறக்க முடியாத வண்ணம் கயிற்றின் மூலம் இறுக்கியுள்ளார்.
தன் வலது கையில் உள்ள வாள் மூலம் பன்றியின் கழுத்துப் பகுதியைக் குத்தி அந்த வாள் பன்றியின் கழுத்துக்கு வெளியே வரும்படி இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றியுடன் வீரன்  போரிடும்போது வீரனுடைய நாய் அவனுக்கு உதவியாக பன்றியின் இடது பின்னங் காலைத் தாக்குகிறது.
இந்த நடுகல்லில் எழுத்துப் பொறிப்புகள் ஏதும் இல்லாததால் சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இந்த நடுகல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவருகிறது. வீரச் செயலின்போது தன் இன்னுயிரை விட்ட மாவீரன் மற்றும் அவரது நாயின் நினைவாக நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் தங்களை அழிவில் இருந்து காப்பாற்றுபவரைப் போற்றி வணங்கும் இயல்புடையவராய் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com