தாராபுரம் ஆஞ்சநேயர் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 18th May 2019 06:43 AM | Last Updated : 18th May 2019 06:43 AM | அ+அ அ- |

திருப்பூர் அருகே உள்ள தாராபுரம் ஸ்ரீ காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் பிரதிஷ்டை செய்த 732 ஆஞ்சநேய மூர்த்திகளில் 89 ஆவது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர் சுவாமி. பொதுவாக சீதாராமர் கோயில்களில் மூலமூர்த்தியாக சீதாராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் இருப்பது வழக்கம். ஆனால் தாராபுரத்தில் ஏழு அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது கோயிலின் தனி சிறப்பு.
இக்கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சார்த்தி ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டால் திருமணத் தடை, கல்வி, உடல் பிணிகள் தீர்ந்து குணமடையும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் தேரோட்ட விழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் வடம் பிடித்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தேரில் ஆஞ்சநேயர், சீதாராமர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கல்யாணராமர் கோயில் வீதியில் நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை தேர் நிலையை அடையும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.