முத்தூர் வாரச் சந்தையில் இன்றுமுதல் நாட்டுக்கோழி விற்பனை
By DIN | Published On : 18th May 2019 06:43 AM | Last Updated : 18th May 2019 06:43 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் வாரச் சந்தையில் சனிக்கிழமை முதல் நாட்டுக்கோழி விற்பனை அறிமுகம் செய்யப்படுகிறது.
இங்கு சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. வழக்கமான காய்கறி, பழ வகைகள், மளிகைப் பொருள்கள் வியாபாரத்துடன் இங்கு நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரபலமானதாகும்.
இது தவிர சுற்றுவட்டார விவசாயிகள் கொண்டுவரும் விளை பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஏறத்தாழ ரூ. 50 லட்சம் மதிப்பில் வாரந்தோறும் ஆட்டு வியாபாரம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சனிக்கிழமை (மே 18) முதல் இந்த வாரச் சந்தையில் நாட்டுக்கோழி விற்பனை நடைபெற உள்ளது. இனி வாரந்தோறும் தென்னிந்திய அளவிலான நாட்டு ரகக் கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு வர இருப்பதால், வாங்குபவர்களும், விற்பவர்களும் பங்கேற்று, பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.