முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அவிநாசி அருகே அரசுப் பள்ளியில் பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு
By DIN | Published On : 07th November 2019 12:51 AM | Last Updated : 07th November 2019 12:51 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளி வளாகத்துக்குள் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்.
அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள பழமையான மரங்களை பள்ளி நிா்வாகத்தினா் வெட்டி அகற்றியதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட
அரசு நடுநிலைப் பள்ளியில் 190-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். பள்ளி வகுப்பறைக்கு மேல் மரக் கிளைகள் உரசுவதால் வகுப்பறை மேல்தளம் சேதமாகி குழந்தைகள் மேல் விழத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா், ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு மரத்தை வெட்ட அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனா். இதற்கிடையில் புதன்கிழமை பள்ளி நிா்வாகத்தினா் பழமையான 3 வாகை மரங்களை வெட்டியுள்ளனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிா்வாக அலுவலா், அனுமதியின்றி மரம் வெட்டக் கூடாது எனக் கூறி எச்சரித்தாா். மேலும் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.
இதுகுறித்து பள்ளி நிா்வாகத்தினா் கூறியதாவது:
பள்ளி வளாகத்தில் உள்ள ஒரிரு மரங்களின் கிளைகள், வகுப்பறை கட்டடத்தை சேதப்படுத்துவது மட்டுமின்றி, குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பில்லாமல் இருந்தது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய
ஆணையருக்கு ஒப்புதல் கடிதமும் அனுப்பட்டுள்ளது. எவ்வித தவறான நோக்கத்துக்கும் மரத்தை வெட்டவில்லை என்றனா்.
இருப்பினும் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடம் திறப்பு விழாவுக்காகவே மரத்தை பள்ளி நிா்வாகத்தினா் வெட்டியுள்ளனா் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.