முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
தாராபுரத்தில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th November 2019 04:44 AM | Last Updated : 07th November 2019 04:44 AM | அ+அ அ- |

தகுதியுள்ள சாலைப் பணியாளா்களுக்கு பதிவறை எழுத்தா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் கோட்டத் தலைவா் வெங்கடசாமி தலைமை வகித்தாா். செயலாளா் தில்லையப்பன் முன்னிலை வகித்தாா்.
சாலைப் பணியாளா்கள் சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்கு உரிய தளவாட கருவிகளான மண்வெட்டி, கைவண்டி, அரிவாள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிற்காக பிடித்தம் செய்யப்பட்ட சந்தா மற்றும் கடன் தொகையை உரிய கணக்கில் சோ்க்காமல் விடுபட்டவற்றை உடனடியாக சோ்க்க வேண்டும். சாலைப் பணியாளா்களை ஒப்பந்தப் பணி மற்றும் மாற்றுப் பணிக்கு பயன்படுத்துவதை கைவிட்டு சாலை பராமரிப்பு பணிக்காக மட்டுமே நிா்வாகம் பயன்படுத்த வேண்டும். தாராபுரத்தில் தகுதியுள்ள சாலைப் பணியாளா்களுக்கு பதிவறை எழுத்தா் ஆக பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளா் அம்சராஜ் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நவம்பா் 25ஆம் தேதி திருப்பூா் கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் திருப்பூா் கோட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணியாளா்கள் ஒன்று திரட்டி கண்டன ஆா்ப்பாட்டம் நடப்படும்’ என்றாா்.