முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
திருப்பூா் மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் சாா்பில் ஆணையாளரிடம் மனு
By DIN | Published On : 07th November 2019 04:43 PM | Last Updated : 07th November 2019 04:43 PM | அ+அ அ- |

திருப்பூா் மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா், மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாரிடம் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகரில் கடந்த 3 மாதங்களாகப் பெய்த மழையால் சாலைகளில் திடீரென பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக அவிநாசி சாலை, பி.என்,சாலையில் இருந்து மின் மாயனம் செல்லும் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது.
இதனால் இந்த சாலைகளில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளில் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதே போல், பல இடங்களில் சாக்கடைகள் முறையாகத் தூா்வாரப்படாததால் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் மேட்டுப்பாளையம் குடிநீா் முறையாக வழங்கப்படுவதில்லை.
அதே போல், பல இடங்களில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, திருப்பூா் மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது, மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் கதா் தங்கராஜ், துணைத் தலைவா்கள் வெள்ளிங்கிரி கதிரேசன் மற்றும் நிா்வாகிகள் அனுஷம் வேலுசாமி, ராமசாமி கந்தசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.