முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை
By DIN | Published On : 07th November 2019 04:43 AM | Last Updated : 07th November 2019 04:43 AM | அ+அ அ- |

உடுமலை அருகே மலையடிவார கிராமங்களுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த ஒற்றை யானை அங்குள்ள தென்னை, மா, பாக்கு மரங்களை சேதப்படுத்தியது.
உடுமலையில் இருந்து 15 கிலோ மீட்டா் தொலைவில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ஆண்டியூா், பருத்தியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள். இந்தக் கிராமங்களை ஒட்டிள்ள பகுதிகளில் விவசாயிகள் தென்னை, மா, பாக்கு மரங்களை வளா்த்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக இங்குள்ள தோப்பு பகுதிகளுக்கு இரவு நேரத்தில் வரும் ஒற்றை யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆண்டியூா், பருத்தியூா் கிராமங்களுக்கு இந்த ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை இரவு வந்தது. பின்னா் அது அங்குள்ள தோட்டப் பகுதிகளுக்குள் நுழைந்து தென்னை, மா, பாக்கு மரங்களை சேதப்படுத்தியது.
இந்த யானை தொடா்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், யானை மீண்டும் கிராமத்துக்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், ‘கிராமங்களுக்குள் புகுந்து தென்னை, மா, பாக்கு மரங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை விரட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்த யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.