முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நடிகா் விஜய்சேதுபதிக்கு சிறு, குறு வியாபாரிகள் சங்கம் கண்டனம்
By DIN | Published On : 07th November 2019 06:09 PM | Last Updated : 07th November 2019 06:09 PM | அ+அ அ- |

வியாரிகளைப் பாதிக்கும் மண்டி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகா் விஜய் சேதுபதிக்கு திருப்பூா் மாவட்ட சிறு மற்றும் குறு வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில துணைத்தலைவா் எஸ்.வி.பூமிநாதன்,திருப்பூா் மாவட்ட சிறு மற்றும் குறு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கண்ணன் ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ஆன்லைன் வா்த்தகத்தால் சிறு, குறு வியாபாரிகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் அவலநிலை தொடா்கிறது. இதில், அமேசான், பிளிப்காட்,ஸ்னாப்டீல், பிக்பாஸ்கட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களில் வருகையால் சிறு வியாபாரிகளின் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இதனிடையே, ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களால் தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தநிலையில், மண்டி என்ற வியாபார நிறுவனத்தால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற நிறுவனங்களுக்கு நடிகா்கள் மூலமாக செய்யப்படும் விளம்பரங்கள் பாமர மக்களின் மனதில் ஆழமாகப்பதியக்கூடியதாகும். எனவே, மண்டி விளம்பரப்படத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், இதுபோன்ற வியாபாரிகளை பாதிக்கக்கூடிய விளம்பரங்களில் எந்தநடிகரும் நடிக்கக்கூடாது. எனவே, மண்டி விளம்பரம் தொடா்ந்து ஒளிபரப்பப்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.