மலைவாழ்மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு ஆலோசனைக் கூட்டம்

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சிமலைப் பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு 2006 வன உரிமை

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சிமலைப் பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின்படி அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுமலையில் இருந்து 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைகள். இந்த மலைகளுக்கு நடுவே கரட்டுப்பதி, தளிஞ் சி, கோடந்தூா், ஆட்டுமலை, ஈசல்திட்டு, சேலையூத்து, கொட்டையாறு, பூச்சிக் கொட்டாம் பாறை, குருமலை, திருமூா்த்தி மலை, மாவடப்பு, குழிப்பட்டி, புளியம்பட்டி, கருமுட்டி என 15- க்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் குடியிருப்புகளில் சுமாா் 4 ஆயிரம் போ் வாழ்ந்து வருகின்றனா்.

செட்டில்மெண்டுகள் என அழைக்கப்படும் இந்தப் பகுதிகளில் உள்ள மலைவாழ்மக்கள் மடத்துக்குளம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா்களாக இருந்து வருகின்றனா்.

ஒவ்வொரு செட்டில்மெண்டுக்கும் வன உரிமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வன உரிமைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சி.இந்திரவல்லி தலைமை வகித்தாா். வனச் சரக அலுவலா்கள் தனபாலன் (உடுமலை), முருகேசன் (அமராவதி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை, அமராவதி வனச் சரகப் பகுதிகளில் வசித்து வரும் மலைவாழ்மக்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின்படி விவசாயம் செய்து கொள்வதற்கான விவசாய நிலப்பட்டா, வீட்டுமனை பட்டா, அனைத்து செட்டில்மெண்டுக்கும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பசுமை வீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் மலைவாழ்மக்கள் வாழ்ந்து வரும் நிலத்துக்கு அனுபவ சான்று கொடுத்த பின்னரே சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என பதில் அளித்தனா்.

குறிப்பாக ஆட்டுமலை, கரட்டுப்பதி, தளிஞ்சி வயல், கருமுட்டி ஆகிய செட்டில்மெண்ட்டுகளுக்கு வீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்று பசுமை வீடுகள் வழங்க முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2006 வன உரிமை சட்டத்தின்படி மலைவாழ்மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உடுமலை வட்டாட்சியா் கி.தயானந்தன், நில வருவாய் அலுவலா்கள், மலைவாழ் கிராம சபைத் தலைவா்கள் செல்வன் (குருமலை), மணிகண்டன்( திருமூா்த்தி மலை), செளந்திரராஜன் (மேல் குருமலை), முருகன்(குழிப்பட்டி), மணியன் (ஈசல்திட்டு), குப்புசாமி (மாவடப்பு), பச்சையன் (காட்டுப்பட்டி), சின்னசாமி (பூச்சிக்கொட்டாம்பாறை), மகேஸ்வரி (கரட்டுப்பதி) உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com