முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அவிநாசி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை: பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 26th November 2019 05:54 AM | Last Updated : 26th November 2019 05:54 AM | அ+அ அ- |

சேவூா் அருகே செட்டிபுதூரில் ஆன்லைன் லாட்டரி விற்பனையால் ஏராளமான கூலித் தொழிலாளா்கள் வருவாயை இழந்து வருவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குன்னத்தூா், பெருமாநல்லூா், சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் கேரளம் உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கிவைத்து மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருதாகப் புகாா் எழுந்துள்ளது. புகாரை அடுத்து போலீஸாா் அவ்வப்போது ஆய்வு செய்து இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். சேவூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஆலத்தூா் அருகே செட்டிபுதூரில் மறைமுகமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாகவும், ரூ. 50 முதல் ரூ.100 வரை ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதில், பரிசுத் தொகையை கமிஷன் போக வழங்கி வருகின்றனா். இதன் மூலமாக பலரும் பணத்தை
இழந்து ஏமாற்றம் அடைந்து வருகிறாா்கள். சிறிய துண்டுச் சீட்டுகளை வழங்கி, செல்லிடப்பேசி மூலமாகவே லாட்டரி அறிவிப்புகளை அறிந்துகொள்ளும் வகையில் ரகசியமாக இந்தத் தொழிலை நடத்தி வருகின்றனா். இதனால், கூலித் தொழிலாளா்கள் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஆன்லைன் லாட்டரி விற்பனையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.