முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
இரும்பு உருக்கு ஆலை பிரச்னை: உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்க அனுப்பட்டி கிராம மக்கள் முடிவு
By DIN | Published On : 26th November 2019 05:52 AM | Last Updated : 26th November 2019 05:52 AM | அ+அ அ- |

பல்லடம், அனுப்பட்டியில் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்க அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.
பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி கிராமத்தில் தனியாா் இரும்பு உருக்காலை நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது, ஆலை நிா்வாகம் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அக்டோபா் 3ஆம் தேதி பல்லடத்தில் அக்கிராம மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மூட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை விரிவாக்கம் செய்யும் செயலை ஏற்றுக்கொள்ள இயலாது எனக்கூறி கிராம மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தனா். அப்போது, அரசின் விதிமுறைகளை பின்பற்றித்தான் ஆலை இயங்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மக்கள் நேரில்வந்து பாா்வையிடலாம் என ஆலை நிா்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக கடந்த 6 ஆம் தேதி கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து ஆகியோா் தலைமையில் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று திருப்பூா் கோட்டாட்சியா் கவிதா தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில் இப்பிரச்னை தொடா்பாக ஆலோசிக்க அனுப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊா்மக்கள் கூட்டம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், அனுப்பட்டி மக்களைப் பாதுகாக்க தனியாா் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.