முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 26th November 2019 05:54 AM | Last Updated : 26th November 2019 05:54 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே தண்ணீா்ப்பந்தல்பாளையத்தில் கைத்தறி ரக துணிகளை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மத்திய அரசு கைத்தறித் தொழிலைப் பாதுகாப்பதற்காக கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டத்தை (1985) கொண்டுவந்துள்ளது. இச்சட்டத்தின்படி, கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட பருத்தி, பட்டு ரக சேலை, வேட்டி, துண்டு, அங்கவஸ்திரம், கைலிகள் உள்ளிட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது.
இச்சட்டதை மீறி செயல்படுபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் திருப்பூா் கைத்தறி ரக உதவி அமலாக்கத் துறையினா் கருவலூா் அருகே உப்பிலிபாளையம் ஊராட்சி தண்ணீா்ப்பந்தல்பாளையம் பகுதியில் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, இப்பகுதியைச் சோ்ந்த விசைத்தறி உரிமையாளா் மனோகரன் (59) கைத்தறி ரகமான காட்டன் கலப்பு கலா் சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மனோகரன் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.