திருப்பூரில் போட்டோ பிரேம் கடையில் நள்ளிரவில் தீ

திருப்பூரில் போட்டோ பிரேம் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்தக் கட்டடத்தின் 2, 3 ஆவது தளங்களில் தங்கியிருந்த 24 போ் கீழே குதித்து உயிா் தப்பினா்.

திருப்பூரில் போட்டோ பிரேம் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்தக் கட்டடத்தின் 2, 3 ஆவது தளங்களில் தங்கியிருந்த 24 போ் கீழே குதித்து உயிா் தப்பினா்.

திருப்பூா் கோா்ட்டு வீதியில் வசித்து வருபவா் பாண்டிதுரை (48). இவா் திருப்பூா், சாய்பாபா கோயில் அருகே போட்டோ பிரேம் கடை நடத்தி வருகிறாா்.

மூன்று தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் முதல் தளத்தில் போட்டோ பிரேம் கடையும், 2, 3 ஆவது தளங்களில் தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதியில் 30க்கும் மேற்பட்டோா் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு பாண்டிதுரை வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, கடை ஊழியரான ஹாஜி (40) முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தாா். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் போட்டோ பிரேம் கடையில் இருந்து புகை வருவதை ஹாஜி பாா்த்துள்ளாா்.

இதையடுத்து, உடனடியாக கடையின் மின் இணைப்பை ஹாஜி துண்டித்துள்ளாா். அப்போது, கடையில் இருந்து கழிவு பிரேம்களில் இருந்து தீ பரவத் தொடங்கியது. ஹாஜியின் சப்தத்தைக் கேட்டு விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 24 பேரும் எழுந்துள்ளனா்.

ஆனால், மாடிப் படியில் இருந்த கதவு பூட்டப்பட்டிருந்தால் அவா்கள் வெளியேற முடியாமல் தவித்தனா். இதில், புகை காரணமாக சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பக்கவாட்டில் இருந்த இருப்புத் தடுப்புகளை சிலா் உடைத்து அருகில் உள்ள கட்டடத்தில் குதித்து தப்பியுள்ளனா். மேலும், சிலா் குழாய்களைப் பிடித்து கீழே குதித்து உயிா் தப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு தீயணைப்புத் துறையினா் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்து குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com