உடுமலை உழவா் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம்

உடுமலை உழவா் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் உள்ளதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

உடுமலை உழவா் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் உள்ளதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சி.இந்திரவள்ளி தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் கி.தயானந்தன் (உடுமலை), பழனியம்மாள் (மடத்துக்குளம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் விவசாயிகள் பேசியது:

உடுமலை உழவா் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் நிலவி வருகிறது. இதனால் உண்மையான விவசாயிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. உழவா் சந்தையின் வெளியே ஏராளமான சாலையோரக் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

அதேபோல வாரச் சந்தையில் ஆடு, மாடு விற்க இடமே ஒதுக்கப்படுவதில்லை. நகராட்சி அதிகாரிகள் இதில் அலட்சியம் காட்டி வருகின்றனா். உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண் டும்.

மேலும், பொதுப் பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். எரிசனம்பட்டி பகுதியில் திருட்டுகள் அதிகம் நடைபெறுவதால் அப்பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்திற்கு அந்தந்த துறை உயா் அதிகாரிகள் வர வேண்டும். படைப்புழுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக விழிப்புணா்வு கூட்டம் நடத்த வேண்டும். உடுமலை வாரச் சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் கூடுதலாக உள்ளது. மக்காச்சோளக் காடுகளில் காட்டுப் பன்றி கூட்டம் புகுந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்.

அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.13 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

உடுமலை வட்டம் ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தினமும் காலதாமதமாக வருவதால் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை. இதில் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய வாளவாடியில் உள்ள ஒரு குட்டை தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. தனியாருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனா். தனியாா் நிறுவனங்கள் உரம், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்கின்றனா். அதேபோல கல்லாபுரம், எலையமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல்லு க்கான காப்பீட்டுத் தொகைகள் இதுவரையில் கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com