யார்னெக்ஸ் ஜவுளிக் கண்காட்சியை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஏஇபிசி துணைத்தலைவர் ஆ.சக்திவேல் பேட்டி

திருப்பூரில் யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா சார்பில் வியாழக்கிழமை தொடங்கிய ஜவுளிக் கண்காட்சியை

திருப்பூரில் யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா சார்பில் வியாழக்கிழமை தொடங்கிய ஜவுளிக் கண்காட்சியை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு வர்த்தகர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின்(ஏஇபிசி) துணைத்தலைவர் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஐகேஎஃப் வளாகத்தில் யார்னெக்ஸ் சார்பில் 3 நாள் சர்வதேச ஜவுளிக் கண்காட்சியை ஆ.சக்திவேல் தொடங்கிவைத்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தக் கண்காட்சியில் மிக நவீன முறையில் தயாரிக்கப்பட்ட துணிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இதை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு வர்த்தகர்களும் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலமாக துணிகளின் மதிப்பை அதிகரிக்க முடியும். அமெரிக்கா, துபை ஆகிய நாடுகளில் முதலீட்டாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, துபை  ஆகிய இடங்களில் முதலீட்டாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். 
இந்தக்கூட்டத்தில் அமெரிக்காவில்  ரூ.5 ஆயிரம் கோடியும், துபையில், ரூ.3,750 கோடிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்  மூலமாக 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு நல்ல வரவேற்பு  இருந்தது என்றார். 
இதில், நிட்மா சங்கத் தலைவர் அகில் ரத்தினசாமி பேசியதாவது:
பின்னலாடை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு உற்பத்தியாளர்களும் இந்த அரங்குகளைப் பார்வையிட்டு தங்களது உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.திருப்பூரின் வளர்ச்சி அளவுக்கு போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. கோவை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை விமான நிலையத்தில் இருந்து திருப்பூர் வரைக்கும் நீட்டிக்க வேண்டும். இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து வரும் வியாபாரிகள் எளிதில் திருப்பூர் வந்தடையலாம் என்றார்.
கண்காட்சியைப் பார்வையிட்ட திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியதாவது: மறுசூழற்சி செய்யப்பட்ட பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு சந்தையில் மவுசு அதிகரித்துள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருள்களை மறுசூழற்சி செய்து ஆடைகளாகத் தயாரிக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க உதவுகிறது. விலை குறைந்த இந்தப் பொருள்களை வாங்கும்போது இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்கும் பக்கபலமாக அமையும் என்றார்.
இதன் தொடக்க விழாவில் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


சேவூரில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்கக் கோரிக்கை
அவிநாசி, செப். 12: சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் சேவூர் கைகாட்டி அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கைகாட்டி மூலக்குரும்பபாளையம் சாலையில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சாலை சேவூரில் இருந்து மூலக்குரும்பபாளையம் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக, சாலையோரம் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், இறைச்சிக் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.  எனவே, இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com