Enable Javscript for better performance
திருப்பூர் அருகே உயர்மின் கோபுர  நில அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்பு: 19 பெண்கள் உள்பட 59 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் அருகே உயர்மின் கோபுர  நில அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்பு: 19 பெண்கள் உள்பட 59 பேர் கைது

    By DIN  |   Published on : 14th September 2019 07:15 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே இரு இடங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்புத் தெரிவித்த 19 பெண்கள் உள்பட 59 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
     குண்டடம், தாராபுரம் பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இப்பணிக்கு நிலத்தை அளவீடு செய்ய பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் வரும்போது விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இந்நிலையில் குண்டடத்தை அடுத்துள்ள வேலாயுதம்பாளையத்தில் சுப்பிரமணியம் என்பவரது நிலத்தை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக அளவீடு செய்வதற்கு காவல் துறை பாதுகாப்புடன் பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வந்தனர். அப்போது அங்கு அதிகாரிகளை கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையிலான விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதையடுத்து ஏடிஎஸ்பி ஜெயசந்திரன் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 37 பேரைக் கைது செய்து குண்டடத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அதேபோல மேற்கு சடையாம்பாளையத்தில் கோமதி என்பவரது நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளைத் தடுக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 22 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    kattana sevai