உடுமலை அருகே மண் கடத்தல்: 5 லாரிகள் சிறைபிடிப்பு

உடுமலை அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட  5 லாரிகளை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனர்.

உடுமலை அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட  5 லாரிகளை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனர்.
மடத்துக்குளம் வட்டத்தில் 10க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்சூளைகளுக்கு விவசாய நிலங்களில் இருந்து சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டு லாரிகள் மூலமாகக் கொண்டுசெல்லப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. 
இதில், அமராவதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள நெல் விளையும் நிலங்களில் இருந்து அன்றாடம் மண் அள்ளப்பட்டு செங்கல்சூளைகளுக்கு கொண்டுசெல்லப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், விளைநிலங்களில் இருந்து மண் அள்ளிக்கொண்டு சென்ற 5 லாரிகளை மடத்துக்குளம்-கணியூர் சாலையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தடுத்துநிறுத்தி சிறைபிடித்தனர். அப்போது, லாரிகளில் இருந்துவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் மடத்துக்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மடத்துக்குளம்  வட்டாட்சியர் பழனியம்மாள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் அங்கு சென்று மண் கடத்திய 5 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
  இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
எந்தவித அனுமதியும் இல்லாமல் விவசாய நிலங்களில் இருந்து சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 100 லோடுகள் வரை மண் கடத்தப்படுகிறது. நெல் விளையும் நிலங்களில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் அள்ளப்படுவதால் நீர் வழித்தடங்கள் பாதிக்கப்படும் என்றனர்.
இது குறித்து மடத்துக்குளம் வட்டாட்சியர் பழனியம்மாள் கூறியதாவது: இந்தச் சம்பவம் எங்களது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று 5 லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளோம். மண் கொள்ளையத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com