சித்தம்பலத்தில் குறைந்துவரும் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி

பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் நடப்பு ஆண்டு கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது.


பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் நடப்பு ஆண்டு கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது.
 பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு, ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், கரசமடை, வெங்கிட்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழாக்களுக்கு பூக்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பல்லடம் வட்டாரப் பகுதி விவசாயிகள் கோழிக்கொண்டைப் பூக்கள் பயிரிட்டுள்ளனர். தூறல் மழை, இதமான வெயில் என உகந்த காலநிலை நிலவுவதால் பூச்செடிகள் நன்கு வளர்ந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர்ப் பாசனத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்ய ரூ.25ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். அதில் ஏக்கருக்கு 1500 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம். கடந்த மே மாதம் கிலோ ரூ.100-க்கு விற்றது. தற்போது கிலோ ரூ.70-க்கு விற்பனையாகிறது. 
 ஏனைய விவசாயப் பயிர்களை விட கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் என்பதால் இந்த பூ விவசாயத்தை விவசாயிகள் ஆண்டுதோறும் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். அறுவடைக்கு வந்த 4 மாதமும் பலன் தந்து தினசரி வருவாயை ஈட்டித் தரும். கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் பூக்கும். இவை ரோஜா, சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க பயன்படுகின்றன. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப் பூக்கள் திருப்பூர், கோவை பூ சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
 இந்நிலையில் பல்லடம், சித்தம்பலம் பகுதியில் ஆண்டுதோறும் 50 ஏக்கருக்கும் குறையாமல் கோழிக்கொண்டை பூ பயிரிடப்பட்டு வந்த பகுதியில் நடப்பாண்டு வெறும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 இது பற்றி விவசாயி ரத்தினசாமி கூறியதாவது:
 கோழிக்கொண்டைப் பூவானது கேரளத்தின் ஒணம் பண்டிகை, தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சமயங்களில் மட்டுமே அதிக அளவில் விற்பனை ஆகும். இதனை கருத்தில் கொண்டுதான் பூ சாகுபடியில் ஈடுபடுகிறோம்.
 கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளத்தில் பலத்த மழை, வெள்ளத்தால் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை. அதேபோல தமிழகத்தில் பணப்புழக்கம் குறைவால் பெரிய நிறுவனங்கள் கூட தங்களது பூஜை செலவினங்களை குறைத்து கொண்டுள்ளன. அதனால் பூக்கள் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும் விவசாய கூலி வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 8 மணி நேரம் வேலைக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை நாங்கள் கொடுக்கிறோம். பெரும்பாலானோர் நூறு நாள் வேலைக்கு சென்றுவிடுவதால் கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை.
 சரஸ்வதி பூஜை விழா காலத்தில் தொடர்மழை பெய்ததால் பூக்கள் செடியில் முளைப்பதோடு அழுகி விடும். அதனால் பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலையும் உருவாகும். இதன் காரணமாக கோழி கொண்டை பூ சாகுபடி பரப்பு 50 ஏக்கரில் இருந்து படிப்படியாக குறைந்து நடப்பாண்டு சித்தம்பலத்தில் வெறும் 2 ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com