மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலைகட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை

மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.


மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக குண்டடம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் அனந்தகுமார் கூறியதாவது: 
திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரத்தில் ராபி பருவத்தில் மக்காச்சோள பயிர் செய்வதற்கு விவசாயிகள் கோடை உழவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோள பயரில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே வரும் பருவத்தில் விவசாயிகள் ஒரே சமயத்தில் மக்காச்சோளத்தை விதைக்க வேண்டும்.
பெவேரியா பேசியானாவை 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் நேர்த்தி செய்வதால் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் மக்காச்சோள விதைப்பின்போது வயல் ஓரங்களில் சூரியகாந்தி, ஆமணக்கு, சாமந்தி, தட்டைப்பயறு ஆகியவற்றை பயிர் செய்து புழுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். 
மக்காச்சோளம் விதைப்பு செய்யும் வயல்களில் கடைசி உழவின்போது தேவையான அடி உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ சேர்க்க வேண்டும். அத்துடன் இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 12 இடங்களில் வைக்க வேண்டும். மக்காச்சோளம் விதைப்பு செய்த 7ஆவது நாளில் 1லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் வேப்ப எண்ணெய் கலந்து வயல்களில் தெளிக்க வேண்டும்.
மேலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணமான மெட்டாரைசியம் அனிசேபிலோ என்ற பூஞ்சாணத்தை ஹெக்டேருக்கு 4 கிலோ வீதம் தெளிக்க வேண்டும். இதை விதைப்பு செய்த 15 முதல் 20 நாள்களுக்கு மேல் ஒரு முறை தெளிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com