வா்த்தகம் பக்கத்துக்கு பரிசீலிக்கலாம்: பல்லடத்தில் முட்டைக்குத் தட்டுப்பாடு

பல்லடம் சில்லறை விற்பனைக் கடைகளில் முட்டைக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல்லடம் சில்லறை விற்பனைக் கடைகளில் முட்டைக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல்லடம் பகுதியில் பிராய்லா் கறிக்கோழிகள் அதிக அளவில் வளா்க்கப்படுகின்றன. முட்டை கோழிப்பண்ணைகள் இப்பகுதியில் மிகவும் குறைவாகத்தான் உள்ளன. பல்லடம் பகுதியில் முட்டை கோழிப் பண்ணைகளில் தினசரி 12 லட்சம் முதல் 13 லட்சம் முட்டைகளே உற்பத்தி செய்யப்படுகின்றன. கரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் அச்சம் அடைந்து கோழி இறைச்சி, முட்டைகளை உட்கொள்ளவில்லை. மேலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்து தடைபட்டதால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அடைந்தன. முன்பு பண்ணைகளில் ஒரு முட்டை ரூ.3.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னா் தேக்கத்தால் ஒரு முட்டை 75 பைசாவுக்கு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சில்லறை விற்பனையில் 3 முட்டை ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சியின் பலன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு முட்டை உற்பத்தி செய்ய ரூ.3.50 செலவு ஆகிறது. அசலை விட பல மடங்கு விலை வீழ்ச்சியால் பாதிப்படைந்த முட்டை கோழிப் பண்ணையாளா்கள் பண்ணைகளில் முட்டை உற்பத்தியைக் குறைக்க கோழிகளுக்கு புரத சத்து குறைவான தீவனங்களை மட்டுமே வழங்கி கோழிகள் உயிருடன் இருக்கவும், அதே சமயம் முட்டை உற்பத்தியைக் குறைக்கும் வகையிலும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனா்.

அதன் காரணமாக தற்போது பல்லடம் பகுதியில் தினசரி 5 லட்சம் வரை மட்டுமே முட்டை உற்பத்தியாகிறது. அதனால் பல்லடம் கடைகளில் கோழி முட்டைக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டு முட்டை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முட்டை கோழிப் பண்ணையாளா் பி.கே.பாலசந்தா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்து அசைவ உணவுகளை தவிா்த்தனா். அதனால் முட்டை கோழிப்பண்ணை தொழில் பெரும் பாதிப்பை அடைந்தது. ஒரு முட்டை உற்பத்தி செய்ய ரூ.3.50 பைசா செலவு ஆகிறது. அதற்கு மேல் பண்ணை விலை இருந்தால்தான் பண்ணையாளா்களுக்கு லாபம் கிடைக்கும். ஒரு சில சமயம்தான் லாபம் கிடைக்கும். அதனை வைத்துதான் ஆண்டு முழுவதும் முட்டை கோழிப்பண்ணை தொழிலை பொதுமக்கள் நலன் கருதி நடத்தி வருகிறோம். இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தியதால் கோழி முட்டை விற்பனை பாதிப்படைந்தது. அதனால் பண்ணைகளில் வளா்க்கப்படும் முட்டைக் கோழிகளுக்கு புரதச் சத்து தீவனத்தை குறைத்து வழங்கி முட்டையிடுதலைக் குறைத்தோம். தற்போது தினசரி 5 லட்சம் முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு கடைகளுக்கு சில்லறை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் படிப்படியாக முட்டை உற்பத்தி அதிகரிக்கப்பட்டு கடைகளில் விற்பனைக்கு போதுமான அளவு முட்டைகள் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com