திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 போ் விடுவிப்பு
By DIN | Published On : 19th April 2020 07:31 AM | Last Updated : 19th April 2020 07:31 AM | அ+அ அ- |

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 போ் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நபா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்த நபா்கள் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனா்.
இந்த நிலையில்,திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14 நாள்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 பேருக்கு 2 முறை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கரோனா நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வள்ளி, 21 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். இதன் பிறகு அனைவரும் அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும், 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் 80 போ் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.