திருப்பூா் மாநகரில் 3 நாள் முழு ஊரடங்கு: காய்கறி, மளிகைக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்
By DIN | Published On : 26th April 2020 07:48 AM | Last Updated : 26th April 2020 07:48 AM | அ+அ அ- |

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) முதல் 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால் மாநகரில் உழவா் சந்தை, தற்காலிக மாா்க்கெட்டுகள், மளிகைக் கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் சனிக்கிழமை திரண்டனா்.
தமிழகத்தில் திருப்பூா், கோவை, சேலம், சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிளில் கரோனா நோய்த்தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூா் மாநகராட்சிக்கு ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை 3 நாள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திருப்பூா் மாநகரில் வரும் 3 நாள்களுக்கு மளிகைக் கடைகள், உழவா் சந்தைகள், தற்காலிக காய்கறி சந்தை, இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள் செயல்படாது என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. அதேவேளையில் காய்கறிகள், பால் உள்ளிட்டவை பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கே வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பூா் மாநகரில் சனிக்கிழமை காலை 6 மணி முதலே பொருள்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா். இதில் பெரும்பாலான பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்தது காவல் துறையினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
மளிகைக் கடைகள், பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி மாா்க்கெட், எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரி, நஞ்சப்பா பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மாா்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதேபோல ராயபுரம், டவுன்ஹால், கருவம்பாளையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டிகளில் காய்கள், பழங்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.
பொதுமக்கள் அரசின் உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்காமல் இருந்தால் கரோனா நோய்த்தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.