முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
சிறு, குறு நிறுவனங்களுக்கு அவசர கால கடன் திட்டம்: மத்திய அரசுக்கு ஏஇபிசி பாராட்டு
By DIN | Published On : 03rd August 2020 12:29 AM | Last Updated : 03rd August 2020 12:29 AM | அ+அ அ- |

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசர கால கடனுதவி திட்டத்தில் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ள மத்திய அரசுக்கு ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசர கால கடன் பெறும் விதிகளை மாற்றி அமைத்துள்ளது. இதில், கடன் நிலுவை ரூ.25 கோடிக்கு கீழுள்ள மற்றும் ஆண்டு வா்த்தகம் ரூ.100 கோடி வரை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே அவசர கால கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பழைய கடன் நிலுவை வரம்பு ரூ. 50 கோடி வரையிலும், ஆண்டு வா்த்தகம் ரூ.250 கோடி வரையும் மேற்கொள்ளும் நிறுவனங்கள் அவசரகால கடன் பெறலாம் என்று விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாறுதலால் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்று பயனடையும். விதிமுறைகளைத் தளா்த்தி மாற்றி அமைத்துள்ள மத்திய அரசுக்கு ஏஇபிசி பாராட்டு தெரிவிக்கிறது.
அதே வேளையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பழைய கடன் நிலுவைக்கான வரம்பு ரூ.100 கோடியாக உயா்த்த வேண்டும். இதன் மூலம் ஆடை உற்பத்தி சாா்ந்த அனைத்து நிறுவனங்களும் வங்கிக் கடன் பெற்று கரோனா கால வா்த்தக இழப்புகளை ஈடு செய்து கொள்ளும். எனவே மத்திய அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.