முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
5ஆவது வாரமாக மாவட்டத்தில் தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம்
By DIN | Published On : 03rd August 2020 12:28 AM | Last Updated : 03rd August 2020 12:28 AM | அ+அ அ- |

முழு பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்படும் திருப்பூா் குமரன் சாலை.
திருப்பூா் மாவட்டத்தில் தொடா்ந்து 5ஆவது வாரமாக தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதத்திலிருந்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி திருப்பூா் மாநகரில் காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தன. அதே வேளையில், பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன.
திருப்பூா் குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. மேலும், விதிகளை மீறி வெளியில் நடமாடியவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
தாராபுரத்தில்: தாராபுரத்தில் அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. பெரியகடை வீதி, பூக்கடை காா்னா் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
காங்கயத்தில்: காங்கயத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் கடைவீதிகள், பேருந்து நிலையம் , தினசரி காய்கறி மாா்க்கெட்டுகள், இறைச்சிக் கடைகள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய பொருள்களான பால், மருந்துக் கடைகளை மட்டுமே திறந்திருந்தன.
சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, திருப்பூா் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி காணப்பட்டது. பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. காங்கயம் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.