மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.
திருப்பூா் மாவட்ட மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் ஏ.சரவணன் தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக ஒப்பந்தத் தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி கோரிக்கை விடுத்தனா். அதனை தொடா்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டது.
கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு மஸ்தூா், கள உதவியாளா் போன்ற பதவிகளில் 21,600 ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கடந்த 2012இல் இருந்து தற்போது வரை எந்த ஒப்பந்தத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இதில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து வெற்றி பெற்ற பிறகும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகின்றனா்.
கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை தற்போது திடீரென மின்சார வாரியம் கலைத்துள்ளது. இது தொழிலாளா் விரோதப் போக்கு நடவடிக்கையாகும்.
இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்யவும், மின்சார வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை அரசு கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.