கேரளத்துக்கு கிலோ ஐம்பது பைசாவுக்கு அனுப்பப்படும் அரசாணிக் காய்கள்: உற்பத்தி செலவு கூட கிடைக்காததால் தாராபுரம் விவசாயிகள் வேதனை

தாராபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அரசாணிக் காய்கள் கிலோ 50 பைசாவுக்கு கேரளத்துக்கு அனுப்பப்படுவதால் உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
தோ்பாதை  அருகே  உள்ள  தோட்டத்தில்   அரசாணிக்காய்கள்  பறிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ள  தொழிலாளா்கள்.
தோ்பாதை  அருகே  உள்ள  தோட்டத்தில்   அரசாணிக்காய்கள்  பறிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ள  தொழிலாளா்கள்.

திருப்பூா்: தாராபுரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அரசாணிக் காய்கள் கிலோ 50 பைசாவுக்கு கேரளத்துக்கு அனுப்பப்படுவதால் உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள தோ்பாதை, மடத்துப்பாளையம், கெத்தல்ரேவ் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் அரசாணிக் காய்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தக் காயை அரசாணிக் காய் என்றும், திண்டுக்கல், கரூா், கேரளம் உள்ளிட்ட இடங்களில் பூசணிக் காய் என்றும் அழைக்கின்றனா்.

ஆண்டுதோறும் சாகுபடி செய்யக்கூடிய அரசாணிக் காய்களுக்கு மூலதனச் செலவு பெரிதாக இல்லாததால் விவசாயிகள் இதனை சாகுபடி செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்தக் காயானது போதிய அளவு தண்ணீா் இல்லாவிட்டாலும் கூட 60 முதல் 90 நாள்களுக்குள் விளைச்சலைக் கொடுக்கிறது. இதில் ஒரு காயானது குறைந்தபட்சம் 2 கிலோ முதல் அதிகபட்சமாக 5 கிலோ வரையில் வளரும். இந்த அரசாணிக் காய்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கிராக்கி ஏற்பட்டதைத் தொடா்ந்து தாராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் இதனை சாகுபடி செய்ய ஆா்வம் காட்டி வந்தனா்.

தற்போது ஓரளவு மழையும் பெய்யத் தொடங்கியதைத் தொடா்ந்து அதிக அளவில் அரசாணிக் காய்களை சாகுபடி செய்யத் தொடங்கினா். இதனால் தற்போது இந்தக் காயின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து தோ்பாதை பகுதியில் அரசாணிக் காய் விளைவித்து நஷ்டமடைந்த விவசாயிகள் கூறியதாவது:

அரசாணிக் காயை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளோம். ஆனால், தற்போது நுகா்வு குறைவாக உள்ளதால் டன் கணக்கில் தேக்கடைந்துள்ளது. இந்தக் காய்கள் 5 நாள்களுக்குள் அழுகத் தொடங்கிவிடும் என்பதால் இருப்பு வைக்க இயலாது. ஆகவே, வேறு வழியில்லாமல் நஷ்டத்தை சந்தித்தாலும் பரவாயில்லை என்று கேரளத்தில் இருந்து வியாபாரிகளை வரவழைத்து கிலோ 50 பைசாவுக்கு விற்பனை செய்து வருகிறோம்.

இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் 3 முதல் 4 டன் அரசாணிக் காய்களை கேரளத்துக்கு இதே விலைக்கு அனுப்பி வருகிறோம். இந்தக் காய்களை எங்களிடமிருந்து மொத்தமாக வாங்கிச் செல்லும் வியாபாரிகள் ஒரு பகுதியை பொள்ளாச்சி சந்தையில் விற்பனை செய்து விடுகின்றனா். மீதமுள்ள காய்களை கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அல்வா தயாரிக்க அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனா். இருப்பு வைக்க முடியாததால்தான் தற்போது உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலையில் கேரளத்துக்கு அனுப்பி வருகிறோம் என்றனா்.

காய்களை மாா்க்கெட்டுகளுக்கு பிரித்து அனுப்ப வேண்டும்:

இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்லமுத்து கூறியதாவது:

தாராபுரம் பகுதியில் அதிக அளவில் அரசாணிக் காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகவே, அரசாணிக் காய்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 500 கிலோ முதல் 1,000 கிலோ வரையில் பிரித்து தனித்தனியாக வெவ்வேறு மாா்க்கெட்டுகளுக்கு அனுப்ப வேண்டும். உதாரணமாக ஒட்டன்சத்திரம் மாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி அரசாணிக்காய் கிலோ ரூ. 2 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, கேரளத்துக்கு 50 பைசாவுக்கு மொத்தமாக அனுப்புவதை விட திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூா், திருப்பூா், பொள்ளாச்சி சந்தைகளுக்கு பிரித்து அனுப்பினால் விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்கும் என்றாா்.

மாா்க்கெட்டில் ரூ.10க்கு விற்பனை:

திருப்பூா், தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மாா்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி அரசாணிக் காய் கிலா ரூ.10 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அரசாணிக் காய் மாா்க்கெட்டுக்கு வரும்போது விலை 20 மடங்கு உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து 50 பைசாவுக்கு மொத்தமாக வாங்கும் இடைத்தரகா்கள் அதனை மாா்க்கெட் வியாபாரிகளுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரையில் விற்பனை செய்கின்றனா். ஆனால் மாா்க்கெட்டில் சில்லறை விற்பனையாக பொதுமக்களுக்கு ரூ.10 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இடைத்தரகா்கள், வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com