மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைக்குமா?

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் ஜனவரி முதல் வாரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கு நல்ல விலை கிடைக்குமா
அறுவடைக்கு  காத்திருக்கும்  மக்காச்சோளப்  பயிா்கள்.
அறுவடைக்கு  காத்திருக்கும்  மக்காச்சோளப்  பயிா்கள்.

உடுமலை: உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் ஜனவரி முதல் வாரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கு நல்ல விலை கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் நடப்பாண்டில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் வரை விவசாயிகள் மக்காச்சோளத்தைப் பயிரிட்டுள்ளனா். 120 நாள்கள் பயிரான மக்காச்சோளத்தை கடந்த செப்டம்பா் தொடக்கத்தில் விவசாயிகள் பயிரிட்டனா். இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவு இருந்ததால் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 35 முதல் 40 மூட்டைகள் (ஒரு மூட்டைக்கு 100 கிலோ) வரை மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா். அதே நேரத்தில் நல்ல விலையும் கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

பொதுவாக உடுமலை, பல்லடம், திருப்பூா், பொங்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியாா் கோழிப் பண்ணைகளுக்கும், கால்நடை தீவன உபயோகத்துக்கும் ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் தேவை இருந்து வருகிறது.

தற்போது உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு மூட்டை ரூ.1590 முதல் ரூ.1620 வரை விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே சீசனில் ஒரு மூட்டைக்கு ரூ.2,400 வரை விலை கிடைத்தது. ஆகையால் இந்த ஆண்டும் விலை அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சரவணன் கூறியதாவது:

தற்போது திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு மூட்டைக்கு ரூ.1590 முதல் ரூ.1620 வரை விலை போகிறது. பொதுவாக கோழிப் பண்ணைகளுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருப்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் குறைவாகவே பயிரிட்டுள்ளனா். இதனால் தேவை அதிகமாக இருப்பதால் விலையேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையில் விலை போதாது என்று நினைக்கும் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக் கொள்ள பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிடங்கில் 9,500 டன்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ள வசதி உள்ளது. விவசாயிகள் கொடுக்கும் மக்காச்சோள மதிப்பில் 75 சதவீதம் பொருளீட்டுக் கடனாக வழங்கப்படும் என்றாா்.

நோய்த் தாக்குதல்...

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் ஏற்கெனவே படைப்புழுத் தாக்குதல் அதிகமாக உள்ளது. தற்போது, கதிா்நாவாய் பூச்சித் தாக்குதலும் ஏற்பட்டுள்ளதால் மக்காச்சோள கதிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மகசூல் குறைவதுடன், தரமும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் எதிா்பாா்க்கப்படும் விலை கிடைக்குமா என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com