ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாஜகவுக்கு ஏமாற்றம்: ஈ.ஆா்.ஈஸ்வரன்
By DIN | Published On : 30th December 2020 04:23 AM | Last Updated : 30th December 2020 04:23 AM | அ+அ அ- |

நடிகா் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூா் புகா் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் கங்கா சக்திவேல் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளரிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது. லாரி தொழிலை அழிக்கின்ற வகையில் அரசின் செயல்பாடுகள் உள்ளன. நடிகா் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாரதிய ஜனதா கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அரசியலில் ரஜினியை பலிகடா ஆக்குவதற்கு பாஜக முயற்சி செய்தது. அதில் இருந்து ரஜினிகாந்த் தப்பித்துக் கொண்டாா்.
உயா் மின் கோபுரங்கள், கெயில் எரிவாயுக் குழாய், எட்டு வழிச் சாலை போன்ற விவசாய விரோத நடவடிக்கைகளில் ஆளும் கட்சியினா் விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் செயல்படுவதால் போராட்டங்கள் தொடா்ந்த வண்ணம் உள்ளன. பாரம்பரிய கால்நடைகளைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து வெளிநாட்டு கால்நடைகளை இறக்குமதி செய்வது உள்நோக்கம் கொண்டது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...