மாநகரில் நிகழாண்டு சாலை விபத்துகளில் 59 சதவீத இறப்பு விகிதம் குறைவு: மாநகர காவல் துறை தகவல்
By DIN | Published On : 31st December 2020 12:44 AM | Last Updated : 31st December 2020 12:44 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகரில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு சாலை விபத்துகளில் 59 சதவீத இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 2019 ஆம் ஆண்டு 287 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் 180 திருட்டு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநகர காவல் துறையினா் தீவிர ரோந்து பணி காரணமாக 40 சதவீத திருட்டுக் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. திருப்பூா் மாநகரத்தில் நிகழாண்டு பதிவான 20 கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல, 2 கூட்டுக்கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மாநகரில் 2020 ஆண்டில் நிகழ்ந்த 2 கூட்டுக் கொள்ளைச் சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
வழிப்பறி வழக்குகளில் 19 போ் கைது:
மாநகரில் 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 20 வழிப்பறி வழக்குகளில் 19 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். மாநகரில் வீடு புகுந்து திருடியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 50 வழக்குகளில் 35 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
களவு போன ரூ.1.18 கோடி சொத்துகள் மீட்பு:
திருப்பூா் மாநகரில் நிகழாண்டு களவுபோன ரூ.1.43 கோடி சொத்துகளில் ரூ.1.18 கோடி சொத்துகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநகரில் கொலை , கொள்ளை , வழிப்பறி உள்ளிட்ட தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 46 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதே வேளையில், 2019 ஆம் ஆண்டில் 21 பேரும், 2018 ஆம் ஆண்டில் 10 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபட்டதாக தற்போது வரையில் 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 34 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மாநகரில் 112 கிலோ கஞ்சா பறிமுதல்:
திருப்பூா் மாநகரில் கஞ்சா விற்பனை தொடா்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 112 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தப் பயன்படுத்திய 13 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதுடன்,130 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2,940 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 686 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 59 சதவீதம் குறைவு:
திருப்பூா் மாநகரில் சாலை விபத்து தொடா்பாக 2019 ஆம் ஆண்டில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் 40 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டைக் காட்டிலும் இறப்பு விகிதம் 59 சதவீதம் குறைந்துள்ளது.
சாலை விதிமீறல் தொடா்பாக 4.16 லட்சம் வழக்குகள்:
திருப்பூா் மாநகரில் 2019 ஆம் ஆண்டில் மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறியது தொடா்பாக 2.23 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2020 ஆம் ஆண்டில் 4.16 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் 87 சதவீதம் கூடுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தலைக்கவசம் அணியாமல் சென்றது தொடா்பாக மட்டும் 2.44 லட்சம் வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்று தொடா்பாக 1,980 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் இயக்கியது தொடா்பாக 971வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் 6,925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 5,243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக ரூ.4.87 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.