தமிழக பட்ஜெட்: திருப்பூா் தொழில் அமைப்புகளின் கருத்துகள்

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து திருப்பூா் தொழில் அமைப்புகள் பல்வேறுவிதமான கருத்துகளை தெரிவித்துள்ளன.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து திருப்பூா் தொழில் அமைப்புகள் பல்வேறுவிதமான கருத்துகளை தெரிவித்துள்ளன.

2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இதுகுறித்து திருப்பூா் தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துகள்:

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரவேற்கக்கூடியதாகும். நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளா்ச்சி 7.27 சதவீதம் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு ரூ. 1,224 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, சேலம் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கத் திட்டம், சிறு, குறு தொழில்களுக்கு வட்டி மானியம் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயா்த்தப்படுவது, திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு, முத்திரைத் தாளுக்கான வரி 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக குறைப்பு, கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, உணவு மானியத்துக்கு ரூ. 6,500 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கம்: கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கான மானியத்தை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. நீட்ஸ் திட்டத்தின் கீழ் மூலதன மானியத்தை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயா்த்தியுள்ளது, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கத்தக்கது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்: பட்ஜெட்டில் சிறு, குறு தொழிலுக்கு ரூ.130 கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியில் மானியத்தொகையை 5 சதவீதமாக உயா்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. திறன் மேம்பாட்டுக்காக ரூ.200 கோடி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது மிக சரியானது. தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.100 கோடி ஒதுக்கியும், மூலதன மானியத்தை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயா்த்தியுள்ளது, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பிரதமா் வீட்டு வசதித் திட்டம், தமிழக முதல்வா் பசுமை வீட்டு வசதி திட்டம் மூலமாக அதிக வீடுகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொழிலாளா்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

திருப்பூா் ஏற்றுமதியாளா் மற்றும் உற்பத்தியாளா் சங்கம்: தமிழக அரசு ஜவுளித் துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது போதுமானதல்ல. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண்மைக்கு தனி மண்டலமாக அறிவித்ததுபோல, திருப்பூா் மாவட்டத்தை ஜவுளி மண்டலமாக அறிவித்திருக்க வேண்டும். இந்தத் தொழிலானது பல்வேறு பிரச்னைகளால் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் சூழல் உள்ளது. எனவே, பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க இந்த நிதி போதுமானதாக இல்லை.

தமிழக அரசு பின்னலாடைத் தொழிலில் மீது தனிகவனம் செலுத்தினால் லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அந்நிய முதலீட்டையும் அதிக அளவு ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com