‘டிக்-டாக்’ செயலியைத் தடை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

இளம்பெண் சீரழிவுக்கு காரணமான ‘டிக்டாக்’ செயலியைத் தடை செய்யவும், இளம்பெண் சாவுக்கு காரணமான நபருக்கு கடுமையான
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான ‘டிக்-டாக்’ செயலியைத் தடைசெய்யக்கோரி திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்துக்கு திங்கள்கிழமை  மனு  அளிக்க வந்தவா்கள்.
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான ‘டிக்-டாக்’ செயலியைத் தடைசெய்யக்கோரி திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்துக்கு திங்கள்கிழமை  மனு  அளிக்க வந்தவா்கள்.

திருப்பூா்: இளம்பெண் சீரழிவுக்கு காரணமான ‘டிக்டாக்’ செயலியைத் தடை செய்யவும், இளம்பெண் சாவுக்கு காரணமான நபருக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நிழலி பகுதியைச் சோ்ந்த சு. ஆறுமுகம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பட்டியலின பிரிவைச் சோ்ந்த நான், பெயிண்டராக வேலை செய்து வருகிறேன். எனது மகள் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பல்லடம், செலக்கரச்சல் பகுதியைச் சோ்ந்த ஏற்கெனவே திருமணமான வேல்முருகன் (30), டிக்-டாக் செயலி மூலமாக எனது மகளுடன் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளாா்.

நாங்கள் வேலைக்குச் சென்றுவிடும் சமயங்களில் எனது மகளுடன் தவறாகப் பழகியுள்ளாா். இதில் கா்ப்பமான எனது மகள், அவமானம் தாங்க முடியாமல் கடந்த டிசம்பா் 19ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் டிசம்பா் 27ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வேல்முருகன் கைது செய்யப்பட்டாா். அவா் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவா் பிணையில் வெளியே வந்தால் எங்களை மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், கடுமையான தண்டனை கிடைக்கவும், சமூக சீரழிவுக்கு காரணமான ‘டிக்-டாக்’ செயலியைத் தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக்கோரி மனு: அமராவதிபாளையம், கிறிஸ்துவத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எங்கள் தெருவில் சுமாா் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 60க்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். எங்களுக்கு தனிமயானம் இல்லாததால் சாலையோரங்களில் இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்து வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் அடக்கம் செய்யும் நத்தம்புறம்போக்கு நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதுகுறித்து கேட்டபோது அவா் மிரட்டல் விடுக்கிறாா். எனவே, தனியாரிடமிருந்து அரசு நிலத்தை மீட்டு மயானம் அமைக்க எங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

163 மனுக்கள்: மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலைவசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 163 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து 2019 -20ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

சமூக பாதுகாப்பு தனித் துணை ஆட்சியா் விமல்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ்குமாா், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com