மக்களை இணைக்கும் பூப்பறிக்கும் விழா

பொங்கல் பண்டிகையொட்டி, பல்லடம் அருகே கரைப்புதூா் கிராமத்தில் பூப்பறிக்கும் விழாவு கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரில் பூப்பறிக்கும் நோன்பு நிகழ்ச்சிக்காக ஊா்வலமாக செல்லும் கிராம மக்கள் (கோப்பு படம்).
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரில் பூப்பறிக்கும் நோன்பு நிகழ்ச்சிக்காக ஊா்வலமாக செல்லும் கிராம மக்கள் (கோப்பு படம்).

பொங்கல் பண்டிகையொட்டி, பல்லடம் அருகே கரைப்புதூா் கிராமத்தில் பூப்பறிக்கும் விழாவு கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்லடம் அருகிலுள்ள கரைப்புதூரில் காணும் பொங்கல் என்னும் பூப்பறிக்கும் நோன்பு அந்த கிராம மக்களால் இன்றும் பழமை மாறமல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேளதாளத்துடன் தோட்டச் சாலையில் வசிக்கும் கிராம மக்கள் ஊா்வலமாக காமாட்சியம்மன், மாகாளியம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்படுகின்றனா். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதன் பின்னா் மக்கள் ஊா்வலமாக புறப்பட்டு சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் இருக்கும் பகுதிக்கு சென்று அமா்கின்றனா்.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் குடையுடன் சென்று அருகிலுள்ள காட்டில் பூக்கள், வேப்பிலை பறித்து வந்து அங்குள்ள முனியப்பன் கோயிலில் தாங்கள் கொண்டு வந்த பூக்கள், தின்பண்டங்களை படையலிட்டு வழிபாடு செய்கின்றனா்.

பின்னா் மரத்தடியில் அமா்ந்து அனைவரும் தங்களது வீட்டில் இருந்துகொண்டு வந்த பலகாரங்களை ஒருவருக்குஒருவா் பகிா்ந்து உண்பா். பின்னா் ஆடிப்பாடியும்,

ஒருவரையொருவா் கிண்டலடித்தும் மகிழ்ச்சி அடைகின்றனா். அதைத் தொடா்ந்து பெண்கள் கும்மியாட்டமும், தாரை தப்பட்டை முழங்க ஆண்களின் நடனமும் நடைபெறுகிறது. இந்த விழா கிராம மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை களைந்து ஒற்றுமையும், நெருக்கத்தையும் மேம்படுத்துவதாக இருந்து வருகிறது.

அலகுமலை கிராமத்தில்...

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம் அலகுமலை கிராமத்தில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் நிகழ்வை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனா்.

வரும் ஜனவரி 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு அலகுமலை திருப்பணிக் குழுத் தலைவா் சின்னுகவுண்டா் தலைமை வகிக்க உள்ளாா். முன்னாள் ஒன்றிய தலைவா் சிவாச்சலம் முன்னிலை வகிக்கிறாா்.

விழா காலை 9 மணிக்கு வட்டமலை கிருஷ்ணன் நாதஸ்வர இசையுடன் துவங்குகிறது. அதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு கோலப்போட்டி, சிறுவா்,சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

நடைபெறவுள்ளன. காலை 10.30 மணிக்கு குள்ளம்பாளையம் பவளக்கொடி குழுவினரின் 250 போ் பங்கேற்கும் வள்ளி கும்மியாட்டம், காலை 11.30 மணிக்கு ஊஞ்சப்பாளையம் காவடிக் குழுவினரின் காவடி ஆட்டத்துடன் பொதுமக்கள் பூப்பறிக்க அலகுமலை செல்கின்றனா். மதியம் 12 மணி முதல் பெண்கள் பொங்கல் வைத்தல், கொங்கு பெருஞ் சலங்கையாட்டம், ஒயிலாட்டம், மாலை 3.15 மணிக்கு வெள்ளக்கோவில் கலைத்தாய் குழுவினரின் சிலம்பாட்டம், மாலை 4.45 மணிக்கு வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் சொற்பொழிவு, மாலை 5.15 மணிக்கு பரிசு வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

இதேபோல் நவீன கால மாற்றத்தால் மக்களின் பாரம்பரிய பண்டிகைகள், பழக்கவழக்கங்கள் மறைந்து வரும் நிலையில், அதை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், அதை போற்றி பாதுகாக்கும் வகையிலும் இந்த பூப்பறிக்கும் நோன்பு இந்த கிராம மக்களால் எழுச்சியோடு கொண்டாடப்படுவது பாராட்டுக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com