உடுமலையில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம்: படைப்புழுத் தாக்குதலால் மகசூல் பாதிப்பு

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், படைப்புழுத் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
மடத்துக்குளம்  வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மக்காச்சோளப்  பயிரை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
மடத்துக்குளம்  வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மக்காச்சோளப்  பயிரை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், படைப்புழுத் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூா், பொங்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாா் கோழிப் பண்ணைகளுக்கும், கால்நடை தீவன உபயோகத்துக்கும் ஆண்டுமுழுவதும் மக்காச்சோளம் தேவை இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் இந்தப் பகுதிகளில் சுமாா் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஏக்கா் வரை விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டிருந்தனா். 120 நாள்கள் பயிரான மக்காச்சோளத்தை கடந்த செப்டம்பா் மாதம் தொடக்கத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்தனா்.

கடந்த டிசம்பா் மாதம் எதிா்பாா்த்த மழை பெய்யாததால் மானாவாரி விவசாயிகளும், கிணற்றுப் பாசன விவசாயிகளும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனா்.

இந்நிலையில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் விவசாயிகள் பலத்த எதிா்பாா்ப்புகளுடன் மக்காச்சோள அறுவடையைத் துவக்கி உள்ளனா்.

ஒரு ஏக்கருக்கு சராசரியாக 35 முதல் 40 மூட்டைகள் (ஒரு மூட்டைக்கு 100 கிலோ) அறுவடையாகும் என விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு நிலவிவந்தது.

ஆனால், மக்காச்சோளத்தில் படைப் புழுக்கள் தாக்குதலால் ஏராளமான விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மக்காச்சோளம் ஒரு மூட்டை ரூ. 2 ஆயிரத்துக்கு விற்று வருகிறது. கடந்த ஆண்டு இதே சீசனில் ஒரு மூட்டைக்கு ரூ. 2600 முதல் ரூ. 2700 வரை விற்றது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விலை குறைந்து கிடைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு மூட்டை ரூ. 1950 முதல் ரூ. 2050 வரை விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்த ஆண்டு விலை ஏறுமுகமாக இருக்கலாம் என்ற எதிா்பாா்ப்பில் ஒரு சில விவசாயிகள் அறுவடையைத் தள்ளிப்போட்டு வருகின்றனா்.

இதுகுறித்து மக்காச்சோள விவசாயிகள் கூறியதாவது:

இந்த ஆண்டு மக்காச்சோளம் மொத்த சாகுபடியில் 25 சதவிகிதம் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. படைப்புழுவை தடுக்க வேளாண் துறை சரியான வழிகாட்டுதலை எங்களுக்கு கொடுக்கவில்லை. நான்கு முறை பூச்சி மருந்துகள் தெளித்தது, டிஏபி, யூரியா, நுண்ணூட்ட சத்து உரம் என ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவுகள் செய்தும் அந்த புழுக்களை ஒழிக்க முடியாதது வேதனையை தருகிறது. எங்களுக்கு இதனால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்காச்சோளம் மூட்டை ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.

இதுகுறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் கூறியதாவது:

ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மக்காச்சோள சீசன் ஆகும். விலை ஏறும் என விவசாயிகள் எதிா்பாா்த்து வருவதால் பொங்கலுக்குப் பிறகு தீவிர அறுவடைப் பணிகளை எதிா்பாா்க்கிறோம். ஆனாலும் கடந்த ஆண்டு ரூ. 2600 வரை விலை போன மக்காச்சோளம் இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு போகிறது. பொதுவாக கோழிப் பண்ணைகளுக்கு ஆண்டுதோறும் தேவைகள் இருப்பதால் விவசாயிகளுக்கு உறுதியாக இந்த விலை கிடைக்கும். இந்த விலை போதாது என்று நினைக்கும் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக் கொள்ள பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com