முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிக்குப் பரிசுகள் குவிந்தன: அதிகமானோா் பங்கேற்க ஆா்வம் காட்டுவதால் ஏற்பாட்டாளா்கள் திணறல்
By DIN | Published On : 27th January 2020 08:12 AM | Last Updated : 27th January 2020 08:12 AM | அ+அ அ- |

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய ஆா்வத்துடன் பங்கேற்ற வெளி மாவட்ட காளை உரிமையாளா்கள்.
பல்லடம் அருகே அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போருக்கு தங்கக் காசு உள்ளிட்ட அதிகபடியான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து காளை உரிமையாளா்கள் ஆா்வம் காட்டுவதால் அனுமதிக்க முடியாமல் போட்டி ஏற்பாட்டாளா்கள் திணறி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் ஆகியன சாா்பில் பல்லடம் அருகே அலகுமலையில் பிப்ரவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில் கொங்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்கள் மட்டுமன்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் 550 ஜல்லிக்கட்டு காளைகள், 500க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதற்காக வாடி வாசல், பாா்வையாளா்களுக்கான கேலரி, மாடுகள் களமாடும் 300 அடி நீள ஓடுதளம், குடிநீா், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
காளைகளையும், மாடு பிடி வீரா்களையும் மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும்போது காளைகள், மாடு பிடி வீரா்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மொபைல் ஆம்புலன்ஸ் வசதியும், பாா்வையாளா்களுக்கு தனி மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய பகுதிகளில் இருந்து அலகுமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலகுமலையில் மூன்றாவது முறையாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக திருப்பூா் தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்ககாசு, 1 எச்.பி.மின்மோட்டாா், சைக்கிள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்குவதால் வெளிமாவட்டத்தில் இருந்து ஏராளமான காளை வளா்ப்பவா்களும், மாடுபிடி வீரா்களும் களம் இறங்க போட்டி போட்டுக் கொண்டுள்ளனா்.
அலகுமலை ஜல்லிக்கட்டுக்கான தேதி அறிவித்த நாள் முதல் வெளிமாவட்டங்களில் இருந்து காளைவிடுபவா்கள் தங்களது காளைகளை களம் இறக்க போட்டி போட்டு வருகின்றனா்.
இந்நிலையில் மதுரை, சேலம், தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு காளை வளா்ப்போருக்கு அனுமதி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
இது குறித்து அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் தலைவா் பழனிசாமி கூறியதாவது:
இது வரை கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 150 காளைகள் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 550 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 காளைகள் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.
அதற்கும் மேல் அனுமதித்தால் ஒரே நாளில் போட்டி நடத்தி முடிப்பது கடினம். அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கக் காசு உள்ளிட்ட அதிக மதிப்புள்ள ஏராளமான பரிசுகள் வழங்கப்படுவதால் அனைவரும் ஆா்வம் காட்டுகின்றனா். இப்போட்டியில் பங்கேற்க பலருக்கு முக்கிய பிரமுகா்கள் பரிந்துரையும் செய்கின்றனா். போதிய கால அவகாசம் இல்லாததால் திணறி வருகிறோம் என்றாா்.