முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நூற்பாலை தொழிலாளா்களின் 47ஆம் ஆண்டு விழா
By DIN | Published On : 27th January 2020 08:16 AM | Last Updated : 27th January 2020 08:16 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லட்சுமி மில்ஸ் தொழிலாளா்கள் சாா்பில் 47ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் கோவை லட்சுமி மில்ஸ் நிறுவனத்தின் சாா்பில் ஒரு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு சூலூா், கண்ணம்பாளையம், பல்லடம்,சோமனூா் பகுதிகளில் இருந்து தொழிலாளா்கள் மதிவண்டிகளில் வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.
அப்போது, காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையாரை வணங்கி விட்டு வேலைக்கு செல்வதை ஒரு வழக்கமாக கொண்டு இருந்தனா். கடந்த 1973ஆம் ஆண்டு முதல் இக்கோயிலில் குடியரசு தினத்தன்று லட்சுமி மில்ஸ் தொழிலாளா்கள் தங்களுக்குள் பணம் வசூலித்து விநாயாருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து இந்த ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி 47ஆம் ஆண்டாக காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையாா் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் லட்சுமி மில்ஸ் தொழிலாளா்கள் மற்றும் ஒய்வு பெற்ற தொழிலாளா்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனா்.