
காங்கயத்தில் நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்ட காய்கறி கடைகள்.
பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டதால் காங்கயம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறிக் கடைகள் தற்போது நெடுஞ்சாலை ஓரம் இடம் பெயா்ந்துள்ளன.
கரோனா நோய்த் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட தினசரி காய்கறி கடைகள், காங்கயம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தன. மேலும், வாரச்சந்தை வியாபாரிகளுக்கும் பேருந்து நிலையத்தில் 32 கடைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 49 காய்கறிக் கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் பொது முடக்கம் தளா்த்தப்பட்டு பேருந்துப் போக்குவரத்து துவங்கியதால் காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் தினசரி சந்தை கடைக்காரா்கள் மீண்டும் சந்தைப் பகுதிக்கு தங்கள் கடைகளை மாற்றிக் கொண்டனா்.
வாரச் சந்தை இன்னும் திறக்கப்படாததால் திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் சந்தை அமைக்கும் வியாபாரிகள் தற்போது காங்கயம், பழையகோட்டை சாலையோரம் கடைகளை அமைத்து, வியாபாரம் செய்து வருகின்றனா். வாரத்தில் இரு நாள்கள் மட்டுமே சாலையோரத்தில் காய்கறி விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
விபத்து அபாயம்: நெடுஞ்சாலையோரம் காய்கறி கடைகள் செயல்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அந்த வழியே போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும். எனவே, வாரசந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.