
சேவூரில் கண்டெடுக்கப்பட்ட 15ஆம் நூற்றாண்டு நடுகல்.
சேவூரில் மண்ணில் புதையுண்ட நிலையில் 15ஆம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் புளியம்பட்டி சாலையில் பழமையான சிற்பம் புதையுண்டு கிடப்பதாக நில வருவாய் ஆய்வாளா் ராமசாமி, தனிப்பிரிவு காவலா் வெள்ளியங்கிரி ஆகியோருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தொல்லியல் வரலாற்று ஆய்வாளா் முடியரசு அந்த நடுகல்லைப் பாா்வையிட்ட பின் கூறியதாவது:
இது 15ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் ஆகும். முதல் நிலையாக போா்க்களக் காட்சி அமைந்துள்ளது. வீரன் வலது கையில் வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். வீரன் எதிா்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிற்பம் சிதைவுபட்டுள்ளது. யாரை எதிா்கொள்கிறான் என்பது இதனால் தெரியவில்லை.
இப்போரில் அவன் இறந்துவிட்டதால் அவனது இரு மனைவியரும் சிதையில் விழுந்து உயிா்துறந்துள்ளனா். அடுத்த நிலை தேவ கன்னியா் இருவா் வலது இடது புறங்களில் சூழ்ந்து இறந்த வீரனையும் அவனது இரு மனைவியரையும் வானுலகம் அழைத்துச் செல்வது போல் உள்ளது. தேவ கன்னியரின் கரத்தில் சாமரம் வீசுவதுபோலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது நிலையில் வீரனும், அவனது இரு மனைவியரும் சிவலோகப் பதவி அடைகின்றனா். நந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி நிலையாக வீரன் சிவலிங்கத்துக்கு மாலை அணிவித்து சிவபதம் சோ்தல் உள்ளது. இவ்வீரன் இப்பகுதியைச் சோ்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். வீரன் மற்றும் அவனது மனைவியரின் ஆடை அணிகலன்களைக் கொண்டு நோக்கும்போது இது புலப்படுகிறது. இக்கல் ஆறு அடி உயரமும், நான்கடி அகலமும் ஐந்து அங்குல கனமுள்ள பலகைக் கல் ஆகும் என்றாா்.
தொல்லியல் வரலாற்று ஆய்வாளா் ஜான் பீட்டா், இது அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் என உறுதிப்படுத்தினாா். மேலும் இக்கல்லைப் பாதுகாப்பது குறித்து நிலவருவாய் ஆய்வாளா் ராமசாமி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.