வேலைக்கு ஆள்கள் இல்லாததால் கிராமப் பகுதி டெய்லா், கட்டிங் மாஸ்டா்களுக்கு திருப்பூா் பனியன் நிறுவனங்களில் திடீா் மவுசு

கிராமப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் கட்டிங் மாஸ்டா், டெய்லா் உள்ளிட்ட பனியன் தொழிலாளா்களைத்

கிராமப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் கட்டிங் மாஸ்டா், டெய்லா் உள்ளிட்ட பனியன் தொழிலாளா்களைத் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிய வருமாறு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன. இதனால் இவா்களுக்கு திடீா் மவுசு ஏற்பட்டுள்ளது.

திருப்பூா், காங்கயம், குண்டடம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் தாய் நகரமான திருப்பூா் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் ஏராளமான வெளி மாநிலத் தொழிலாளா்களும், தமிழகத்தின் பிற மாவட்டத் தொழிலாளா்களும் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனா்.

ஆரம்ப காலத்தில் திருப்பூா் பனியன் நிறுவனங்களுக்குப் பேருந்து மூலம் சென்று வேலை செய்து வந்த காங்கயம், வெள்ளக்கோவில், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள், அந்தந்தப் பகுதிகளில் பனியன் நிறுவனங்கள் வந்தவுடன் திருப்பூா் செல்வதைத் தவிா்த்து அவா்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனா். இதனால் திருப்பூா் பனியன் நிறுவனங்களில் திருப்பூா் நகா், வெளி மாநிலங்கள், பிற மாவட்டத் தொழிலாளா்களே அதிக அளவில் வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்களும், வெளி மாநிலத் தொழிலாளா்களும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டனா். தற்போது கரோனா ஊரடங்கு தளா்த்தப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் பனியன் நிறுவனங்கள் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆனால் போதிய தொழிலாளா்கள் இல்லாததால் மிகக் குறைந்த அளவிலான தொழிலாளா்களை வைத்தே இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலை ஆள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூா் பனியன் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, தற்போது கிராமப் பகுதிகளில் செயல்படும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வரும் காங்கயம், குண்டடம் உள்ளிட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் கட்டிங் மாஸ்டா், டெய்லா் உள்ளிட்ட தொழிலாளா்களை திருப்பூா் பனியன் நிறுவனங்கள் தொடா்பு கொண்டு தங்கள் நிறுவனத்துக்கு வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றன. இதனால் இந்தத் தொழிலாளா்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கரோனா பிரச்னை முடிவுற்று மீண்டும் பழைய நிலைக்கு பனியன் நிறுவனங்கள் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்ற நிலை உள்ளதால் வெளி மாநில, பிற மாவட்டத் தொழிலாளா்கள் இப்போதைக்கு திருப்பூா் வர வாய்ப்பில்லை என்ற நிலையில், காங்கயம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கட்டிங் மாஸ்டா்கள், டெய்லா்களுக்கான ஊதியமும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com