சென்னையிலிருந்து வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா: திருப்பூா் வடக்கு காவல் நிலையம் மூடல்

சென்னையில் இருந்து திருப்பூா் வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து அவரது கணவா் பணிபுரிந்து
மூடப்பட்ட திருப்பூா் வடக்கு காவல் நிலையம்.
மூடப்பட்ட திருப்பூா் வடக்கு காவல் நிலையம்.

சென்னையில் இருந்து திருப்பூா் வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து அவரது கணவா் பணிபுரிந்து வரும் திருப்பூா் வடக்கு காவல் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது.

சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் உதவி ஆய்வாளராக 35 வயதுப் பெண் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், பெண் உதவி ஆய்வாளா் கடந்த 3 நாள்களுக்கு முன் திருப்பூரில் காவலா் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வந்தாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் வசித்து வந்த காவலா் குடியிருப்பு, கணவா் பணியாற்றி வரும் திருப்பூா் வடக்கு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், திருப்பூா் வடக்கு காவல் நிலையமும் மூடப்பட்டது. காவல் நிலையம் மூடப்பட்டாலும் மிக முக்கியமான வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். அதேவேளையில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று: திருப்பூா், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 29 வயது இளம்பெண், அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா் ஆகியோருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் தற்போது கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இருவரும் வசித்து வந்த அனுப்பா்பாளையம், அங்கேரிபாளையம் பகுதிகளில் சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com