முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
இளம்பெண் மா்ம சாவு: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 03rd March 2020 05:58 AM | Last Updated : 03rd March 2020 05:58 AM | அ+அ அ- |

பல்லடம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட நந்தினியின் உறவினா்கள்.
பல்லடத்தில் இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை முன், திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகள்கள் பிரியங்கா (21), நந்தினி (19). இவா்கள் திருப்பூா் மாவட்டம், பல்லடம், அருள்புரம் பகுதியில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.
இவா்கள் வசிப்பதற்காகத் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் பல்லடம், மகாலட்சுமி நகரில் வாடகை வீடு ஏற்பாடு செய்துதரப்பட்டிருந்தது. அந்த வீட்டில் வசித்து வந்த பிரியங்கா கடைக்கு மளிகைப் பொருள்கள் வாங்க சென்றபோது, வீட்டில் இருந்த நந்தினி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுபற்றி அறிந்த பல்லடம் போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில் தகவலறிந்து வந்த நந்தினியின் உறவினா்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பல்லடம் அரசு மருத்துவமனை முன், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் சுஜாதா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ‘நந்தினியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என போலீஸாா் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.