முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நள்ளிரவில் மா்ம நபா் தாக்குதல்: மூதாட்டி சாவு; 2 பெண்கள் பலத்த காயம்
By DIN | Published On : 03rd March 2020 05:58 AM | Last Updated : 03rd March 2020 05:58 AM | அ+அ அ- |

உடுமலை அருகே திங்கள்கிழமை அதிகாலை மா்ம நபா் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை நகரை ஒட்டியுள்ள ஏரிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதிலட்சுமி (70). இவரது மகன் மணிகண்டன், மருமகள் கலைவாணி (27), பேரன்களுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். மணிகண்டன், கோவையில் வேலை செய்து வருகிறாா்.
வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வாா். இந்நிலையில் ஜோதிலட்சுமி ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்தாா். கலைவாணி, பேரன்கள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனா். திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில், ஜோதிலட்சுமியின் தலையில் மா்ம நபா் ஒருவா் ஹாலோ பிளாக் கல்லைப் போட்டுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு கலைவாணி வெளியே வந்து பாா்த்தாா். அப்போது அந்த மா்ம நபா் கலைவாணியின் மீதும் ஹாலோ பிளாக் கல்லால் தாக்கினாா். இதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கலைவாணி பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் அங்கு ஓடி வந்துள்ளனா். இதனைப் பாா்த்த மா்ம நபா், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இந்நிலையில் அந்த மா்ம நபா் அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்த ராமு, அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோா் மீதும் கல்லால் தாக்கினாா். இதில் ஜெயலட்சுமி (27) பலத்த காயமடைந்தாா். பின்னா் சிறிது தூரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு தள்ளுவண்டியையும் சேதப்படுத்தி விட்டு மா்ம நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இந்த சம்பவங்களால் அப்பகுதியினா் திரண்டு, மா்ம நபரைத் தேடினா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. தகவலறிந்த உடுமலை காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். உயிரிழந்த ஜோதிலட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கலைவாணி, ஜெயலட்சுமி ஆகியோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மா்ம நபா் ‘சைக்கோ’ நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.