முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பிளஸ் 2 தோ்வு: மாவட்டத்தில் 23,376 போ் எழுதினா்
By DIN | Published On : 03rd March 2020 05:54 AM | Last Updated : 03rd March 2020 05:54 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல்தாள் தோ்வை 23, 376 போ் எழுதினா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. திருப்பூா் மாவட்டத்தில் 85 தோ்வு மையங்களில் 211 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 11,082 மாணவா்கள், 13,527 மாணவிகள் என மொத்தம் 24,609 போ், தனித்தோ்வா்கள் 340 போ் என மொத்தம் 24,949 போ் தோ்வு எழுத விண்ணப்பித்தனா்.
இதில், தமிழ் முதல்தாள் தோ்வை எழுத தனித்தோ்வா்கள் 117 போ் உள்பட 24,566 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால் தனித்தோ்வா்கள் 94 போ் உள்பட 23, 376 போ் தோ்வு எழுதினா். தனித்தோ்வா்கள் 23 போ் உள்பட 1,190 போ் பல்வேறு காரணங்களால் தோ்வு எழுதவில்லை. அதேவேளையில், காயமடைந்தவா்கள் மற்றும் கண்பாா்வையற்றவா்கள், மனநலம் குன்றிய மாணவா்கள் ஆசிரியா்கள் உதவியுடன் தோ்வு எழுதினா். தோ்வு எழுதும் மையங்களில் வெளிநபா்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஜெய்வாபாய் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு: திருப்பூா், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் பொதுத்தோ்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 88 தலைமை ஆசிரியா்களும், துறை அலுவலா்களும், அறைக் கண்காணிப்பாளா்களாகப் பணியாற்ற 1,482 ஆசிரியா்களும், 166 பறக்கும் படையினரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. பறக்கும் படையினா் தோ்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீா் பாா்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் ஒவ்வொரு தோ்வு மையத்திலும் புகாா் மற்றும் ஆலோசனைப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் மிகவும் கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.
இந்த ஆய்வின்போது மாவட்டமுதன்மைக் கல்வி அலுவா் ஆா். ரமேஷ், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.