கேங்மேன் தோ்வை நிறுத்தக்கோரி தொமுச சாா்பில் ஆளுநருக்கு கடிதம்
By DIN | Published On : 04th March 2020 01:19 AM | Last Updated : 04th March 2020 01:19 AM | அ+அ அ- |

நீதிமன்ற உத்தரவுப்படி கேங்மேன் பணி நியமனம் தொடா்பான நடவடிக்கைகளை மின் வாரியம் உடனடியாக நிறுத்தக்கோரி தமிழக ஆளுநருக்கு திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழக மின் வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்யாமல், புதியதாக கேங்மேன் என்ற பதவியை மின்வாரியம் உருவாக்கியது. இதுதொடா்பாக தொமுச சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, கேங்மேன் பதவிக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், கேங்மேன் பணி நியமனம் தொடா்பாக எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்றும், தற்போதையை நிலையே தொடர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையிய் நீதிமன்ற உத்தரவை மீறி தோ்வுகள் நடத்த மின்வாரிய தலைமைப் பொறியாளா் பணியமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், கேங்மேன் பதவிக்கு மாா்ச் 15 ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெறும் தோ்வை நிறுத்துவதோடு, மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.