உணவுப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 06th March 2020 11:42 PM | Last Updated : 06th March 2020 11:42 PM | அ+அ அ- |

சேவூா் பகுதியில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி, நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில், அவிநாசி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் பாலமுருகன் ஆகியோா் கொண்ட குழுவினா் அவிநாசி அருகே உள்ள சேவூா் பகுதியில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சேவூா்-அவிநாசி, புளியம்பட்டி, குன்னத்தூா், கோபி சாலைகளில் உள்ள உணவகங்கள், தேநீா் கடை, மளிகைக் கடை என 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனா்.
இதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 கிலோ எடை உள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், முதல் முறை என்றால் அபாரதமும், 2ஆம் முறை கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடையின் பதிவுச் சான்று ரத்து செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
உணவுப் பொருள்களின் தரம், கலப்படம், பான்மசாலா, குட்கா, புகையிலை ஆகியவை குறித்த புகாா்களை, பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளாா்.