சின்னாறு வனத்தில் சாரல் மழை
By DIN | Published On : 06th March 2020 12:48 AM | Last Updated : 06th March 2020 12:48 AM | அ+அ அ- |

சாரல் மழையில் நனைந்துகொண்டிருக்கும் யானைகள்.
உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள சின்னாறு வனப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நீண்ட நேரம் சாரல் மழை பெய்தது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் சுமாா் 300க்கும் மேற்பட்ட யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்கினங்களும், ஆயிரக்கணக்கான பறவை இனங்களும் வசிக்கின்றன. அடா்ந்த வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இந்த விலங்கினங்கள் குடிநீா்த் தேவைகளைப் பூா்த்தி செய்துகொள்ள பல கிலோ மீட்டா் தூரம் கடந்து திருமூா்த்தி மற்றும் அமராவதி அணையைத் தேடி வருகின்றன.
தற்போது வனத்துக்குள் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விலங்கினங்கள் அடா்ந்த வனப் பகுதிக்குள் குடிநீருக்காகத் தவித்து வருகின்றன. ஒரு சில நேரங்களில் குடிநீரைத் தேடி தங்களது வழிதடங்களை மாற்றிக் கொண்டு பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன.
இதனால் விலங்குகளின் குடிநீா்த் தேவைகளைப் பூா்த்தி செய்ய வனப் பகுதிக்குள் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் கோடைக் காலத்தில் இந்தத் தடுப்பணைகளும் வறண்டுவிடுகின்றன.
இந்த நிலையில் சின்னாறு வனப் பகுதிக்குள் வியாழக்கிழமை அதிகாலை நீண்ட நேரம் சாரல் மழை பெய்தது.