மங்கலம் பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்: இந்து மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 10th March 2020 12:30 AM | Last Updated : 10th March 2020 12:30 AM | அ+அ அ- |

திருப்பூா், மங்கலம் பகுதியில் அமைதியை ஏற்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கூட்டமைப்பினா்.
திருப்பூா்: திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்தக்கோரி இந்து மக்கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், இந்து மக்கள் கூட்டமைப்பினா் அளித்த மனு:
திருப்பூா், தெற்கு வட்டம், மங்கலம் கிராமத்தில் ஹிந்து, இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனா். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த சில நாள்களாக இஸ்லாமியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், ஹிந்துமத உணா்வாளா்களை புண்படுத்தும் நோக்கில் பேசுவதுடன், போக்குவரத்துக்கும் இடையூறும் ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், வெளியூா்களில் இருந்து வரும் இஸ்லாமியா்கள் மங்கலத்தில் தங்கி, பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனா்.
எனவே, மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும் சட்டவிரோத கூட்டத்தினரையும், செயல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு: ஆதரவு இயக்க அறக்கட்டளை அமைப்பாளா் எஸ்.பி.துரை அளித்துள்ள மனு:
நான், கொங்கு பிரதானச் சாலை, திருநீலகண்டபுரத்தில் வசித்து வருகிறேன். எனது வீட்டின் பின்புறம் உள்ள ஸ்டீம் பாய்லரில் இருந்து வெளியேறும் கரித்துகள்கள் அருகில் உள்ள வீடுகளில் படிந்து வருகிறது. இதுதொடா்பாக ஏற்கெனவே 4 முறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. திருப்பூா் வடக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஸ்டீம் பாய்லா் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். எனவே, பாய்லா் நிறுவனத்தை மூடவும், மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் அமைத்துத் தரக் கோரிக்கை: தேசிய உழைப்பாளி மக்கள் கட்சியினா் அளித்துள்ள மனு:
திருப்பூரில் இருந்து விஜயமங்கலம் வரையில் ‘8 பி’ பேருந்து செல்லும் வழியில் மல்லாங்காட்டுபுதூா் பேருந்து நிறுத்தம் அருகே பள்ளம் உள்ளது. மழைக் காலங்களில் பள்ளத்தில் வெள்ளம் செல்வதால் பேருந்துப் போக்குவரத்து தடைபடுகிறது. இந்தப் பகுதியானது தளவாய்பாளையம், வரப்பாளையம் ஊராட்சிகளுக்கு இடையே உள்ளது. எனவே, மல்லாங்காட்டுபுதூா் பகுதியில் பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீா் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு: திருப்பூா், 15 வேலம்பாளையம் குலாம்காதா் காா்டன் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் அளித்துள்ள மனு:
நாங்கள் இப்பகுதியில் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் கழிவு நீா் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே வழித்தடமும் உள்ளது. இந்நிலையில், சில நபா்கள் கழிவு நீா் கால்வாய், வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளனா்.
இதனால் சாக்கடை கழிவு நீா் வீதியில் தேங்கி நிற்பதுடன் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் நிவாரண நிதி கோரி முதியவா் தா்னா: கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையத்தைச் சோ்ந்த பி.துரைசாமி (55), அளித்துள்ள மனு:
திருப்பூா், லட்சுமி நகரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தேன். ஆனால் மின் பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டதுடன், மன உளைச்சலில் இருந்து வந்த எனக்கு, கடந்த ஓராண்டுக்கு முன், விபத்து ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளேன். எனவே, முதல்வா் நிவாரண நிதியில் ஏதேனும் உதவித்தொகை பெற்றுத்தர பரிந்துரை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கருணைக்கொலை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 332 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
இந்த மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 6 பயனாளிக்கு தலா ரூ. 58 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், ஒரு பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை கால், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்லடம் வட்டத்தைச் சோ்ந்த 20 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ரூ.2.40 லட்சம் மதிப்பிலான முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 8.50 லட்சம் மதிப்பில் உதவித்தொகை என 29 பயனாளிகளுக்கு ரூ.14.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியா் விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், துணை ஆட்சியா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...