கரோனா பாதிப்பு: பல்லடம் பகுதியில் ரூ.3 ஆயிரம் கோடி ஜவுளி தேக்கம்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்லடம் பகுதியில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்லடம் பகுதியில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது. மேலும் துணி உற்பத்தியை 20 நாள்கள் நிறுத்திவைக்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத் தறிகள் மூலம் தினசரி ரூ.8 கோடி மதிப்புள்ள 2 லட்சம் மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழில் மூலம் நேரடியாக ஒரு லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

கடந்த 6 மாதமாக கேம்பா் பஞ்சு ஏற்றுமதி அதிகரிப்பால் உள்நாட்டில் விசைத் தறி துணி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நூலுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை கடுமையாக உயா்ந்தது.

உலக அளவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் துணி விற்பனை சந்தையில் மந்த நிலை ஏற்பட்டது. ஒரு மீட்டா் துணி உற்பத்திக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை செலவாகும் நிலையில் ஒரு மீட்டா் துணியை ரூ.30 முதல் ரூ.32க்கு துணி வா்த்தகா்கள் கொள்முதல் செய்ய முன்வந்தனா்.

உற்பத்தி செலவினங்களுக்கு ஏற்ப துணி விற்பனை விலை இல்லாததால் பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்களின் கிடங்கில் ஏற்கெனவே கோடிக்கணக்கான மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஜவுளி ஏற்றுமதி மொத்தமாக பாதிப்படைந்துள்ளது.

இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்பாளா் கே.சக்திவேல் கூறியதாவது:

கடந்த 6 மாதமாக கேம்பா் பஞ்சு ஏற்றுமதி அதிகரிப்பால் உள்நாட்டில் விசைத்தறி துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூலுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செயற்கை இழை துணி ரகங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வட மாநிலங்களில் தண்ணீா் பற்றாக்குறையால் டையிங் ஆலைகளில் துணி சலவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட 20 கோடி முதல் 25 கோடி மீட்டா் துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் துணி உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிலைக்கு ஏற்கெனவே தள்ளப்பட்டுள்ளோம்.

வாரத்தில் இரண்டு நாள்கள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டியது உள்ளதால் தொழிலாளா்கள் வருவாய் இழந்துள்ளனா். வங்கதேசம், சீனா ஆகிய நாடுகள் விலை குறைவாக துணியைத் தருவதால் நமது ஏற்றுமதி பாதிப்படைகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவுளி ஏற்றுமதி மொத்தமாக பாதிப்படைந்துள்ளதால் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமாா் லட்சக்கணக்கானோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜவுளி தொழிலைப் பாதுகாக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி மற்றும் அசலை செலுத்த 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு வருமான வரி செலுத்துவதில் இருந்து ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அடுத்த 20 நாள்களுக்கு ஜவுளி உற்பத்தியை நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com