உடுமலையில் விதி மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 28th March 2020 11:35 PM | Last Updated : 28th March 2020 11:35 PM | அ+அ அ- |

உடுமலை - பொள்ளாச்சி சாலையில் இனிப்பகத்துக்கு ‘சீல்’ வைக்கும் நகராட்சி அதிகாரிகள்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் உடுமலையில் விதி மீறி செயல்பட்ட 3 இனிப்பகங்கள் மற்றும் ஒரு பழக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடை, மருந்துக் கடை, உணவகங்கள் உள்ளிட்ட ஒரு சில கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உடுமலையில் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் கடந்த சில நாள்களாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் உடுமலை நகரில் பிரதான சாலையில் ஒரே நிறுவனத்துக்கு சொந்தமான 3 இனிப்பக கடைகள் கடந்த சில நாள்களாக விதி மீறி செயல்பட்டு வந்தன. இந்த கடைகளை மூடுமாறு, நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா். இருப்பினும், கடைகள் தொடா்ந்து திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இதைத் தொடா்ந்து நகராட்சி நகா் நல அலுவலா் சிவகுமாா் தலைமையிலான அலுவலா்கள் மூன்று கடைகளுக்கும் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
இதேபோல மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த பழக்கடையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் அந்த கடைக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.