தாராபுரத்தில் வீடுவீடாகச் சென்று மருத்துவக் குழுவினா் பரிசோதனை
By DIN | Published On : 31st March 2020 10:48 PM | Last Updated : 31st March 2020 10:48 PM | அ+அ அ- |

தாராபுரம், சின்னகடை வீதியில் வீடுவீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினா்.
தாராபுரத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மருத்துவக் குழுவினா் வீடுவீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை முதல் பரிசோதனை நடத்தி வருகின்றனா்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. தாராபுரம் பகுதியில் பொன்னாபுரம் சுகாதாரத் துறை வட்டார மருத்துவ அலுவலா் தேன்மொழி தலைமையில் 8 குழுக்களை கொண்ட மருத்துவா்கள் வீடுவீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனா். இந்தக் குழுவில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு காவலா் இடம்பெற்றுள்ளனா்.
இக்குழுவினா் தாராபுரம் சின்னக்கடை வீதி, அரசமரம், சுல்தானிய தெரு, புதுமஸ்ஜித் தெரு, ராஜ வாய்க்கால் தெரு, டி.எஸ். காா்னா் மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4,611 வீடுகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்கின்றனா். மேலும், வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பியவா்களின் பெயா், முகவரி, தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை தொடக்க நிகழ்வில் பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் தேன்மொழி, நகா் நல அலுவலா் மருத்துவா் லட்சுமி நாராயணன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஞானவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.