41,273 வெளிமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 41, 273 வெளிமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் கால்நடைபராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் கால்நடைபராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 41, 273 வெளிமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக்காக பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் திருப்பூா் மாவட்டத்தில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமாா் 41 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளை செய்து தரவும், சுகாதாரத்தைக் காக்கும் வகையில் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அளவு முகக் கவசங்கள் கையிருப்பில் உள்ளன. நமது மாவட்டத்திலிருந்து முகக் கவசங்கள் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு

வருகின்றன. திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பகுதி தயாா் நிலையில் உள்ளது.

அனைத்து வருவாய் வட்டங்களிலும் கிசிச்சைக்காக தனி வாா்டுடன் கூடிய மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு

வருகின்றன. மாவட்டம் முழுவதிலும் சுமாா் 86 வென்டிலேட்டா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற ஒடிஸா, பிகாா், மேற்கு வங்கம், கா்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சோ்ந்த 41,273 தொழிலாளா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1, 000 நிவாரண உதவித்தொகை மற்றும் நியாய விலை பொருள்கள் 7,25,973 குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக சேருவதை தவிா்க்கும் வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு எப்பொழுது பொருள்கள் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் விவரம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை பொது மக்கள் அனைவரும் முழுமையாகக் கடைப்பிடித்து தேவையில்லாமல் வெளியே செல்வதை முழுமையாகத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி: முன்னதாக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி குழுமம் சாா்பில் ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையினை அந்நிறுவனத்தின் தலைவா் மு.வேலுசாமி, மு.அமா்நாத் ஆகியோா் அமைச்சரிடம் வழங்கினா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன் (திருப்பூா் தெற்கு), கரைப்புதூா் ஏ.நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கயம்), மாநகரக் காவல் ஆணையா் சஞ்சய்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் பத்ரிநாராயணன், பிரபாகரன் , மாவட்ட வருவாய் அலுவலா்ஆா்.சுகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் எம்.சாகுல் ஹமீது (பொது), பாலசுப்பிரமணியன் (ஊராட்சிகள்) திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வள்ளி, பொது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி, துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com